“நான் வருமளவும் வாசிக்கிறதிலும் எச்சரிக்கிறதிலும் போதிக்கிறதிலும் கவனமாயிரு” (1 தீமோ. 4:13)
நீங்கள் பொதுஆராதனையில்வேதப்பகுதியை வாசிக்கப் போகிறீர்கள். இது எளிதான ஒன்றுதான். ஏனெனில், சிறுவர் வேதாகம பள்ளி முதற்கொண்டே நீங்கள் வேதத்தை வாசித்து வருகிறீர்கள். ஆனால், வேதப்பகுதியை வாசிப்பது சில முக்கியமான வழிகளில் வேறுபட்டது என்பதை நீங்கள் அறிவது அவசியம். வேதாகமத்தைப் பொதுவில் வாசிப்பது என்பது தேவனுடைய சத்தத்தை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதாகும்—உலகை உருவாக்கின, காடுகளை வனாந்தரமாக்குகிற, மரித்தோரை உயிரோடு எழுப்புகிற அதே தேவனின் சத்தமே அது.
தேவன் தம்முடைய மக்களின் வாழ்க்கையைத் தாங்குவதும் இந்த வேத வார்த்தையின் மூலமே. அதனால்தான் பவுல் தீமோத்தேயுவுக்கு, “நான் வருமளவும் வாசிக்கிறதிலும் எச்சரிக்கிறதிலும் போதிக்கிறதிலும் கவனமாயிரு” (1 தீமோ. 4:13) என்று அறிவுறுத்தினார். நமக்கு தேவனுடைய வார்த்தையைக் கேட்க வேண்டிய அவசியமிருக்கிறது, அதை நாம் அனைவரும் ஒன்றாகக் கேட்க வேண்டும்.
எச்சரிப்பதிலும் போதிப்பதிலும் கவனமாயிருப்பது என்றால் என்னவென்று நமக்குத் தெரிந்திருந்தாலும், வேதாகமத்தைப் பொதுவில் வாசிப்பதில் கவனமாயிருப்பது (devote) என்றால் என்ன? அடிப்படை அளவில், இதைச் செய்வதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும் என்பதாகும். தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு நாம் எவ்வளவு ஆயத்தம் செய்கிறோமோ, அதேபோல தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கும் நம்மை மிக கவனமாக ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வேதாகமத்தைப் பொதுவில் வாசிப்பதற்கான 5 வழிகள இதோ:
- வேதத்தின் ஆசிரியருக்கு உங்களை அர்ப்பணியுங்கள் (Devote yourself to the Author)
பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியபோது, அவர் மனதில் தேவன் இருந்தார். முதல் அதிகாரத்தின் முடிவிலேயே அவர் துதியோடு தேவனுக்காக வெடித்துப் பொங்குவதிலிருந்து இது தெளிவாகிறது: “நித்திய ராஜாவும், அழியாமையும், அதரிசனமுமுள்ள ஒரே ஞானமுள்ள தேவனுக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்” (1 தீமோ. 1:17). தேவனுடைய மக்களுக்கு மத்தியில் வேதப்பகுதியை வாசிக்கவும், பிரசங்கிக்கவும், போதிக்கவும் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்துவதில் பவுலின் முதன்மையான நோக்கம் இதுவே. தேவன் தம்முடைய நாமத்தையும் தம்முடைய வார்த்தையையும் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தியிருக்கிறார்; தம்முடைய வார்த்தையின் மூலமாகவே அவர் தம்முடைய மக்களிடையே சரியாக உயர்த்தப்படுவார் (சங்கீதம் 138:2).
வேதப்பகுதியைப் பொதுவில் வாசிக்க நாம் ஆயத்தமாகும்போது, நமது மனதில் தேவன் இருக்க வேண்டும். ஏனெனில், தேவன் நமக்கு வெறும் வார்த்தைகளைத் தருவதற்காக மட்டும் பேசவில்லை, தன்னையே தருவதற்காகவே பேசினார். அதனால்தான் இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத். 4:4) என்று கூற முடிந்தது. தேவனுடைய வார்த்தை அவருடைய வாயிலிருந்தே புறப்படுகிறது, எனவே ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய உயிர் நீட்சியாகும். இதன்பொருள், வேதாகமத்தைப் பொதுவில் வாசிப்பதில் நம்மை அர்ப்பணிக்கும்போது, யாருடைய வார்த்தைகளைப் பேசுகிறோமோ அவருக்கு முதன்மையாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
- தேவ வார்த்தைகளுக்கு உங்களை அர்ப்பணியுங்கள் (Devote yourself to the Words)
சில சூழ்நிலைகளில் சடுதியாக, உடனடியாக வேதத்தை வாசிக்கும்படி நம்மிடம் கேட்கப்படும்போது, ஒரு வாக்கியத்திலோ அல்லது சில வார்த்தைகளிலோ நாம் தடுமாறுவது இயல்புதான். இதற்குமுன் நாம் வாத்திராத வார்த்தைகளை வாசிப்போம், வாக்கியங்கள் எங்கே முடிகின்றன என்று தெரியாமலேயே நாம் தொடங்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நமது முதல் வாசிப்பே இறுதி மற்றும் பொது வாசிப்பாக மாறிவிடுகிறது. இத்தகைய வாசிப்பு சற்று தட்டுத்தடங்கலாக இருக்கலாம். ஆனால், திட்டமிடப்பட்ட வேத வாசிப்புகள் உண்மையிலேயே சரியாக திட்டமிடப்பட வேண்டும். வேத வார்த்தைகள் எப்படி ஒலிக்கின்றன, வாக்கியங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
எனவே, வேதப்பகுதியைப் பொதுவில் வாசிக்க ஆயத்தமாவது என்பது, அந்தப் பத்தியைச் சத்தமாகப் பலமுறை வாசிப்பதாகும். அப்போதுதான் அகாஸ்வேரு (Ahasuerus), பெரோதாக்பலாதான் (Berodachbaladan), போன்ற பெயர்களையோ அல்லது கோராசின் (Chorazin), பித்தொலோமாய் (Ptolemais), மித்திலேனே (Mitylene) போன்ற ஊர்களின் பெயர்களையோ எவ்வாறு உச்சரிப்பது என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். மிக முக்கியமாக, வார்த்தைகளைப் பயிற்சிப்பது உரையின் பொருளைச் சரியான அழுத்தத்துடனும் ஏற்ற இறக்கத்துடனும் புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் உதவும்; இது நம்மை மூன்றாவது ஆலோசனைக்கு அழைத்துச் செல்கிறது.
- வேதவார்த்தையின் அர்த்தத்திற்கு உங்களை அர்ப்பணியுங்கள் (Devote yourself to the Meaning)
நாம் வேதாகமத்தைத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவிலோ ஒரு சடங்காகவோ அல்லது வார்த்தைகளில் ஏதேனும் மாயாஜாலம் இருக்கிறது என்பதற்காகவோ வாசிப்பதில்லை. இந்த வார்த்தைகளுக்கு ஒரு அர்த்தமும் நோக்கமும் உண்டு. தேவன் என்ன சொல்ல வருகிறார்—நம்மைப் பற்றி, அவரைப் பற்றி, இரட்சிப்பைப் பற்றி மற்றும் நித்தியத்தைப் பற்றி—என்பதைக் கேட்கும் விருப்பத்தோடு, அதைக் கேட்பதன் மூலம் தேவன் நம்மை அவருக்கு பிரியமாய் உருவாக்க விரும்பும் மனிதர்களாக மாறுவதற்காவே நாம் வேதத்தை வாசிக்கிறோம். பிறர் கேட்கும் வகையில் வேதத்தை வாசிக்கும்போது, தேவன் என்ன உத்தேசித்தார் என்பதை நமது வாசிப்பின் மூலம் சரியாகச் சித்தரிப்பதற்கு, நாம் என்ன சொல்கிறோம் என்பதை நாமே அறிந்திருப்பது இயல்பான ஒன்றாகும். தவறான முறையில் வாசிப்பது தேவனுடைய வார்த்தைகளின் பொருளைத் தவறவிடலாம் அல்லது தெளிவற்றதாக்கலாம்.
எனவே, வேதப்பகுதியைப் பொதுவில் வாசிக்க ஆயத்தமாகும்போது, நமக்கு ஒதுக்கப்பட்ட வேதபகுதியில் நாம் தியானிக்க வேண்டும். இதில் அதை பலமுறை வாசிப்பது, வார்த்தைகளைச் சிந்திப்பது, கேள்விகளைக் கேட்பது மற்றும் அப்பகுதியின் பொருள் மற்றும் விளைவுகளைப் பற்றி யோசிப்பது ஆகியவை அடங்கும். இதற்காக அப்பகுதியில் எழும் ஒவ்வொரு இறையியல் அல்லது நடைமுறைக் கேள்விகளுக்கும் நாம் விடை காண வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆனால், தேவன் பேசுவதைக் கேட்பது என்றால் என்ன என்பதற்கு நாம் ஒரு மாதிரியாகத் திகழ வேண்டும்.
- வார்த்தையின் தொனிக்கு உங்களை அர்ப்பணியுங்கள் (Devote yourself to the Tone)
நாம் வாசிக்கும் வேதபகுதி உண்மையில் என்ன பொருள்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டவுடன், அதன் தொனியையும் நாம் கண்டறிவோம். உலகத்தில் உள்ள எழுத்துக்கள் கருப்பு வெள்ளையாக இருக்கலாம், ஆனால் தேவனுடைய சத்தம் கருப்பு வெள்ளை அல்ல. வீழ்ச்சிக்கு முன் ஏதேனில் ஆதாமிடம் தேவன் ஒரு தொனியிலும், சூறாவளியிலிருந்து யோபிடம் வேறு ஒரு தொனியிலும் பேசுகிறார். சீனாய் மலையில் மோசேயுடன் ஒரு தொனியிலும், இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத். 3:17) என்று சொல்லும்போது வேறு தொனியிலும் பேசுகிறார். ஆகவே நாமும் இதை செய்ய முற்பட்டு கவனத்தைச் சிதறடிக்கும் நாடகத்தனத்தால் நாம் இதை எல்லை மீறிச் செய்யக் கூடாது. ஒரு புலம்பல் பாடலை வாசிக்கும்போது அழ வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு பகுதிக்கான தொனி வேறுபாட்டை உணராமல் செவிடர்களாகவும் இருக்கக் கூடாது.
வேதப்பகுதியைப் பொதுவில் வாசிக்க ஆயத்தமாகும்போது, நாம் அந்தப் பகுதியிடம் கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்தப் பகுதி ஒரு கடுமையான கடிந்துகொள்ளலைத் தருகிறதா, ஆறுதலின் மருந்தாக இருக்கிறதா அல்லது நமது நம்பிக்கையை நினைவூட்டும் ஊக்குவிப்பாக இருக்கிறதா? இது இயேசுவை பேதுரு மறுதலித்த கதையா, இயேசுவோடு பேதுரு ஒப்புரவான கதையா அல்லது இயேசுவைப் பற்றி பேதுரு தைரியமாகப் பிரசங்கித்த கதையா? அந்த எல்லா பகுதிகளும் ஒரே மாதிரி ஒலிக்கக் கூடாது. மகிழ்ச்சியான பகுதிகள் சோகமாக ஒலிக்கக் கூடாது, கம்பீரமான பகுதிகள் சாதாரணமானதாக ஒலிக்கக் கூடாது. நாம் வேதத்தைப் பொதுவில் வாசிக்கும்போது, நமது தொனியானது தேவன் நாம் கேட்கும்படி எழுதிய வார்த்தைகளின் பொருளுக்கு நியாயமான தொனியுடன் அதை வாசிக்க செய்ய வேண்டும்.
- தேவனுடைய மக்களுக்கு உங்களை அர்ப்பணியுங்கள் (Devote yourself to the People)
தேவனுடைய மக்களோடு சேர்ந்து வேதப்பகுதியை வாசிப்பதில் கவனமாயிருக்கும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறியபோது, அவர் உண்மையிலேயே தேவனுடைய மக்களைத்தான் மனதில் வைத்திருந்தார். சில வசனங்களுக்கு முன்பு, 1 தீமோத்தேயு 4:1-இல், “பிற்காலங்களிலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் போதனைகளுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” என்று கூறுகிறார். தீமோத்தேயு சீர்கேடான கதைகளை விலக்கி, “இப்பொழுதும் இனிவரும் காலத்திற்கும் உரிய ஜீவவாக்குத்தத்தமுள்ள” தேவபக்தியில் தேர்ச்சி பெற வேண்டும் (4:7-8). பொதுவில் வேதத்தை வாசிப்பதன் நோக்கமே இதுதான். “இவைகளில் நிலைத்திரு; இப்படிச் செய்வாயானால், உன்னையும் உனக்குச் செவிகொடுப்பவர்களையும் இரட்சித்துக் கொள்வாய்” (4:16) என்று பவுல் கூறுகிறார். தேவனுடைய மக்களின் ஆத்துமாக்களை தேவன் இரட்சிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொதுவேத வாசிப்பு ஒரு முக்கிய வழியாகும்.
மேற்கண்ட இக்காரணங்களினால், பொது ஆராதனையில் வேதப்பகுதியை வாசிக்க ஆயத்தமாகும்போது முதலில் நாம் தேவனிடம் இவற்றிற்காக ஜெபிக்க வேண்டும். பரலோகத்திற்காக தேவன் தம்முடைய மக்களின் ஆத்துமாக்களைத் தாங்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதை நம்மால் செய்ய முடியாது. வெறும் வார்த்தைகளால் மட்டும் முடியாது. எனவே, தேவனுடைய மக்கள் வேதாகமத்தை நித்திய ராஜாவும், அழியாமையும், அதரிசனமுமுள்ள ஒரே ஞானமுள்ள தேவனுடைய சொந்த சத்தமாகக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படியும்படி தேவனுடைய ஆவியானவர் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். திருச்சபை வேதவாசிப்பில் அவர் ஒருவருக்கே கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
ஆசிரியர்: போ.ட்ரென்ட் ஹண்டர் (Trent Hunter) தென் கரோலினாவிலுள்ள கிரீர் (Greer, SC) பகுதியில் அமைந்திருக்கும் ஹேரிடேஜ் வேதாகம திருச்சபையில் (Heritage Bible Church) பிரசங்கம் மற்றும் போதனைகளுக்கான போதகராகப் பணியாற்றி வருகிறார்.